லோகநாதன்.சு


லோகநாதன். சு
புனைப்பெயர்கள்: இளந்தமிழ்வேள், உலகநாதன்.

1. வகை: உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில்.
உயர்திணை.

2. மொழி, இருப்பிடம்:
தமிழ்மொழி. மேட்டூர்அணை, தமிழ்நாடு, நாவலந்தேயம்.

3. பிறப்பு: 
10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5060. (25.11.1958)

4. வினைத்திட்பம்:
அ.எழுத்தாளர்:
கட்டுரை, யாப்பு, கதை

ஆ.நூல்ஆசிரியர்: 
தமிழும் தமிழ்அறிஞர்களும்

இ, வலையொளியாளர்:
கொண்டாட்டம் வலைக்காட்சி. 

உ. சமுகவலைதள இடுகையாளர்:
முகநூல்.

5. ஈடுபாடு: 
கணியம், மந்திரம், வகைப்பாட்டியல் என்கிற தமிழர் அடிப்படையும், பாகுபாட்டியல், முரண்பாட்டியல் என்கிற உலகினர் அடிப்படையுமான ஐந்தியல் ஆய்வறிஞர் 

6. வணிகம் நாவலந்தேய வருமானத்திற்கான வணிகம்.
மனை வணிகம், இயற்கை வேளாண் பொருட்கள் வணிகம்


7. வரலாறு:

நான் பிறந்த ஊர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மேச்சேரி என்னும் கிராமம்.

என் அகவை ஐந்தில், தாரமங்கலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே, தமிழில் நன்றாகப் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டேன்.

என் தொடக்கப்பள்ளி ஆசிரியர் தமிழ்த்திரு செயராமன் அவர்கள்.
உலகநாதனின் உலகநீதியில் முதல் வரியை ஒரு மாணவனை படிக்கச் சொல்லி, பின்னால், எல்லா மாணவர்களையும், அடுத்த அடுத்த வரிகளைத் தொடர்ந்து படிக்கச் சொல்வார், ஐயா செயராமன்.
அந்த முதல் வரியைப் படிக்கும் பேறு எனக்கு கிடைத்தது.

'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்'–என்று
எதிர்பாராதவிதமாக என் தந்தைக்கு தாரமங்கலத்தில் இருந்து
மேட்டூருக்கு மாறுதல் கிடைத்தது. என் தந்தை நெடுஞ்சாலை துறையில் சாலை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
புதிய சூழ்நிலை புதிய நண்பர்கள் ஆனால் தமிழ் பாடத்தில் மட்டும் ஆர்வம் குறையாமல் இருந்தது.

அகவை-13 இந்த அகவையில்தான் என் உடலில் மட்டுமல்ல மனதிலும் மிகப்பெரிய பரிமாற்றம் நடந்தது. ஆமாம் எங்கள் தமிழ் ஆசிரியர் தமிழ்த்திரு.தாமோதரனார் தான் அதற்கு காரணம். ஆம்! அப்படி அவர் என்னதான் செய்து விட்டார்.

முதலில் எங்கள் பெயர்களை எல்லாம் தமிழ் படித்தித் தந்தார். என் பெயரை லோகநாதன் என்று எப்போதும் அழைத்ததில்லை உலகநாதன் என்றே அழைப்பார். கம்பீரமான தோற்றப் பொழிவும், கணீர் என்ற குரலும் அவருக்கே சொந்தமானவை. தமிழ் உணர்வை வஞ்சனை இல்லாமல் அள்ளியள்ளி ஊற்றி வளர்த்தார்.

ஒரு முறை கம்பரின் மருத நாட்டுச் சிறப்பை பற்றி பாடம் நடத்தினார்.
தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க
குவளைக்கண் விழித்து நோக்க
தெண்டிரை எழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம் விற்றிருக்கும் மாதோ!
என்ற பாடல். வகுப்பு முடியும் நேரத்தில், 'எங்கே! யாரேனும் இந்தப் பாடலை சொல்ல முடியுமா' என்று கேட்டார். நான் கையை உயர்த்தினேன். 

'எங்கே சொல் பார்க்கலாம்' என்றார் மளமளவென்று பாடலைச் சொன்னேன்.
உடனே தன் அகன்ற விழிகளால் என்னை உற்றுப் பார்த்தார் நடிகர் சிவாஜிகணேசனை போல், பின் மெல்ல மெல்ல அந்த தமிழ்தெய்வம் என் அருகே வந்தது
சிறப்பு! என்று சொல்லி என் முதுகை ஒரு தட்டுதட்டி தடவிக் கொடுத்தது. ஒரு சாக்பீஸ் துண்டை பரிசாக அளித்தது. என் மனம் சிறகு விரித்து பறந்தது. அதன் மகிமை எனக்குத் தான் தெரியும். 

பின் நாளில் எனது நண்பர் கு.ரா. இப்படி ஒரு கவிதை எழுதினார். தலைப்பு 'சுண்ணக்கட்டி' 'எழுத்துப்பால்சுரக்கும் ஒற்றை காம்பு' என்று

என் அகவை 14, ஒன்பதாம் வகுப்பு தமிழாசிரியர்- புலவர் திரு.மாதவனார்
அவர்கள். ஒருமுறை வகுப்பில் 'முடத்தெங்கு' என்ற பாடத்தை என்னையும், உடன் மாணவர் இளங்கோவையும் படிக்கச் சொல்லி பாடம் நடத்தினார். தாத்தாவும் பேரனும் நடத்தும் உரையாடல் பாடல் அது. 

அடுத்த நாள் வகுப்பில் ஒரு அற்புதம் நடந்தது. ஆசிரியர் வகுப்பில் நுழைந்த உடன் 'லோகநாதா எங்கே அடுத்த பாடத்தையும் நீயே படி' என்றார். எல்லா மாணவர் கண்களும் என்னை நோக்கித் திரும்பின. ஏனென்றால் நான் ஒரு சராசரி மாணவன். பெரும்பாலும் வகுப்பில் முதல் 5 இடத்தில் வரும் நன்றாகப் படிக்கும் மாணவர்களையே கரும்பலகையில் எழுதச் சொல்வதும் படிக்கச் சொல்வதும் நடைமுறை வழக்கம். 

அப்படியிருக்கும் பொழுது-
என்னை படிக்கச் சொல்லி மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது எல்லா மாணவர்களுக்கும் வியப்பாக இருந்தது.
அப்போது அவர் இப்படிச் சொன்னார் 'என்னடா பாக்கீரீங்க, அவனுடைய உச்சரிப்பும், குரலும் தெளிவாக இருக்கிறது அதனால்தான் படிக்கச் சொன்னேன்'
என்றார், என் மனம் ஆனந்தக் கூத்தாடியது, பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த யாப்பிலக்கணத்தில் அவருக்கே வாழ்த்து கவிதை படித்தேன்.

வாராரு வாராரு மாதவனாரு
எங்கள் தமிழ் ஆசிரியர் புலவர் ஏறு
சத்தான தமிழ் பாடம் நடத்திடுவாறு
தாய்த்தழிழை போற்றுவதில் இவர் போல்யாரு என்று.

அகவை 18 பள்ளி இறுதியாண்டு தேர்வு முடித்து வந்து நிறைய கனவுகளுடன் கல்லூரி வாழ்க்கைக்கான ஏக்கமும் கொண்டிருந்த காலம்! ஆனால் என் தந்தையார் பணி ஓய்வு பெற்று விட்டதால் நான் 'தி மதராஸ் அலுமினியம் கம்பெனியில்' பணிக்கு அமர்த்தப்பட்டேன் சுருக்கமாக 'மால்கோ' என்பார்கள். என் நல்ல நேரம் அங்கும் மால்கோ தமிழ் இலக்கிய மன்றம் இருந்தது.

மால்கோ தமிழ் இலக்கிய மன்றத்தில் முத்தமிழ்காவலர் கி.அ.பெ.விசுவநாதம்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் திருக்குறள் முனுசாமி, இலக்கியச் செம்மல் கோ.பெ.நா, சுகிசிவம், லியோனி போன்ற தமிழ் பெருமக்கள் உரையாற்றியிருக்கிறார்கள். அதில் பல சந்தர்பங்களில் நான் பரிசு பெற்ற அனுபவம் உண்டு.

முத்தமிழ்க்காவலர் கி.அ.பெ விசுவநாதம் ஐயா அவர்கள் திருக்குறளும், திருவள்ளுவரும் என்ற தலைப்பில் உரையாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.
'நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான் நல்காது ஆகிவிடின்'
என்ற குறளுக்கு அவர் விளக்கம் தந்த போது: முத்துச்சிப்பி
மழைக்காலத்தில் தன் வாயைத் திறந்து கொண்டு நீர் மேல் மிதந்து கொண்டிருக்கும் அப்போது அதன் வாயில் விழந்த ஒரு மழைத்துளிதான் முத்தாக மாறுகிறது என்றார்.

அதே போன்று குன்றக்குடி அடிகளார் இடத்திலும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கடவுளும் மனிதனும் ஒன்றாக வந்தால் யாரை நீங்கள் முதலில் அங்கீகரிப்பீர்கள்? என்று 'இதில் என்ன சந்தேகம் மனிதனைத்தான்' என்றார்

கடவுளுக்கு என்று தேவைகள் ஏதும் இல்லை மனிதனுக்குதான் தேவைகள் இருக்கின்றன ஆகவே அவனே அங்கீகரிக்கப்படவேண்டும் என்றார்.

அதே போன்று திருக்குறள் முனுசாமி அவர்களின் நகைச்சுவை உணர்வோடு கூடிய திருக்குறள் வகுப்பை மறக்க முடியாது. தொடக்க காலத்தில் அவருக்கு குறைவான எண்ணிக்கை உள்ள குறள்கள் தான் தெரியுமாம். ஏதொவொரு பொதுக்கூட்டத்தில் இரண்டு பேர் இப்படி பேசிக்கொண்டார்களாம். இவருக்கு 1330 திருக்குறளும் மனப்பாடமாக தெரியும். உங்களுக்கு தெரியுமா! என்று. 

அதன் பிறகுதான் அவர் எல்லா திருக்குறளையும் மனப்பாடம் செய்தாராம். 

எனக்கு வயது 28 திருமணம் நடந்தேரியது என் வாழ்க்கை துணையை பி.லிட் தமிழ் பாடம் படிக்க வைத்தேன். என் இரண்டு பெண்குழந்தைகளும் தமிழ்வழிக் கல்வியில்தான் படித்து பட்டம் பெற்று வேலைக்கும் சென்றார்கள். 

எனது நட்பு வட்டம் மிகப் பெரியது ஆமாம் பைந்தமிழ்ப்பித்தன், தமிழ்த்தென்றல், நித்யானந்தம், தமிழ்இயலன், நரேந்திரன், தமிழ்மணி, கவிதாசன், அமுதாம்பிகை, பாபு, ஓவியத்தமிழன், சாகுல்அமிது கு.சி.ரவிச்சந்திரன், கு.பாரி, சிறுமலர்சின்னத்தம்பி, தேவதாஸ், தங்ககோபால், பழ.கருப்பையா, கோ.வா.பழனிவேல், கவிஞர் கு.ரா. வே.ரா மற்றும் பலர்

ஓருமுறை நாங்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இலங்கைத்தமிழ் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தினோம், அப்போது எங்கள் நண்பர் தமிழ்த்தென்றல், தீக்குளிக்க தயாரானார். அப்போது எங்கள் நண்பர் ஆசிரியர் சண்முகம் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி காவெட்டிப்பட்டி எங்களை காட்டிலும் 3 வயது மூத்தவார். 'ஏம்பா: நாமெல்லாம் தீக்குளிச்சி இறந்து போயிட்டா இலங்கை தமிழனை யாருப்பா காப்பாத்துவாங்க: முட்டாள்தனமான முடிவு கைவிடுங்கள் என்றார்.

அதன்பிறகு நாங்கள் எல்லோருமாக சேர்ந்து தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களை சந்தித்தோம். எங்கள் அனைவருக்கும் பிறவிப்பயனை அடைந்து விட்டோம் என்றே தோன்றியது. அப்போது அவர் ஒன்றை சொன்னார் வங்கிகளை வங்கி என்று சொல்வது தவறு வைப்பகம்' என்றுதான் சொல்ல வேண்டுமென்றார்

அன்பின் திருவுருவம் அவர். இலக்கிய ஆசான் கோ.பெ.நா. மறக்க முடியாத மாமனிதர்! அவர் மூலமாக பட்டிமன்றம், கவியரங்கம், பாட்டுமன்றம், கருத்து மன்றம், மற்றும் திறனாய்வு போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி பெற்றோம் முதல் முதலில் அவர் தலைமையிலான கவிஞர் மன்றத்தில் 'விலை மாது' என்ற தலைப்பில் கவிதை வாசித்தேன் அதை திறனாய்வு செய்த தமிழ் ஆசிரியர் ராமஜெயம் ஐயா, 'அதுவேறொன்றும் இல்லை தம்பிக்கு வயசுக் கோளாறு' என்றார்.

அதே போன்று என்னை முதல் முதலில் மேடையேற்றிய பெருமை கவிஞர் கூடல் மணியனைச் சேரும் தலைப்பு : நள்ளிரவில் பூத்த மலர். (விடுதலை நாள்).

அதேபோன்று நண்பர்கள் அனைவரும் சேர்ந்து முதல் முதலில் மேட்டூரில் கட்டிய அமைப்பு தமிழியக்கம் என்பதாகும் வாரம் ஒருமுறை கூடி எங்கள் படைப்புகளை திறனாய்வு செய்து மகிழ்வோம்.

பின்னாளில் பல்வேறு தமிழ் அமைப்புகளோடு தொடர்பு கொண்டிருந்தோம்.

மேட்டூர்த் தமிழ்ச் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழியல் கல்வித்தளம், தமிழியல் சமுதாயத்தளம் முத்தமிழ் கலை இலக்கிய மன்றம், தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி, 'விசும்பு மாத இதழ்' பன்மொழிப் பயிற்றகம் அகவை ஆயிரம் போன்றவை.

பன்மொழிப் பயிற்றகத்தில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மொழிப்பாடங்களை நடத்தினோம்.

பின்னாளில் சென்னையில் தியாகு என்ற பெருமகனார் முதன் முதலில் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியை நிறுவினார் அதன் பிறகு இரண்டாவது பள்ளியாக நாங்கள் மேட்டூர் புதுச்சாம்பள்ளியில் தொடங்கி நடத்தி வந்தோம் எங்கள் பள்ளிக்கு வீரபாண்டியார் வந்துள்ளார்.

'விசும்பு' மாத இதழில் ஆசிரியர் குழுவில் இருந்து கொண்டு கட்டுரை சிறுகதை கவிதை எழுதி வந்தேன். இளந்தமிழ்வேள் என்ற புனை பெயரில். அதில் நான் எழுதிய முதல் கட்டுரை 'எழுத படிக்கத் தெரிந்தவருக்கு இவ்வளவு மரியாதை ஏன்? என்பது.
இந்த கட்டுரை எனக்கு மிகப்பெரிய பேரும், புகழும் தேடித்தந்தது. 

அதே போன்று அதில் எழுதிய 'இனி இந்தக் கைகள் எந்த மரத்தையும் வெட்டாது' என்ற சிறு கதை குறும்பட இயக்குநர் தமிழியலன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு 'உயிரின் நிறம் பச்சை: என்ற தலைப்பில் 'மக்கள் தொலைகாட்சியில்: 11 நிமிட குறும்படமாக ஒளியரப்பானது. இதில் நான் நடித்தும் உள்ளேன். அதேபோன்று தமிழறிஞர் கதிர் முத்தையா, கடலூர் அவர்கள் தொடங்கிய 'முப்பால் முழுக்கம்' என்ற இதழிலும் கட்டுரை எழுதும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

அதேபோன்று நாங்கள் தொடங்கிய சிங்காரவேலர் கல்விக் கோட்டத்தில்
உலகம் தழுவிய தமிழ் அறிஞர்கள், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் வரவழைத்து உலகத்தமிழ் அறிஞர்கள் மாநாடு நடத்தினோம். அந்த மாநாட்டை தலைமை தாங்கி நடத்தி கொடுத்தவர் சிந்தனையாளர் மா.அர்த்தநாரி ஐயா அவர்கள் 'ஊருக்கு பத்துபேர்' என்ற தமிழ் அமைப்பில் தலைவர் நங்கவள்ளி கிராமம், சேலம் மாவட்டம். 

அதேபோன்று ஜலகண்டாபுரம் தமிழ் அறிஞர் திரு.தமிழ்அந்தணர் கவிஞர் கோனூர் பெருமாள், கவிஞர் புலவர் சொக்கர், வாசு, சோமு போன்ற பெருமக்களை மறக்க முடியாது.
எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கை வேளாண் விஞ்ஞானி 

நம்மாழ்வாரின் தொடர்பு, மிகவும் இனிமையானது. அவர் அடிக்கடி சொல்லுகின்ற வாக்கியம் 'அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு: என்பார். அதாவது பயிர்விளைந்தால் அறுவடைக்குப்பிறகு அடிக்கட்டை காட்டுக்கு உரமாகும், நடுக்கட்டை மாட்டுக்கு தீனியாகும், நுனிப்பாகம் வீட்டுக்கு உணவாகும்.

இது மட்டுமல்லாமல் தமிழோடு யோகக்லையும் சேர்த்து கற்று, மனவளக்கலை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறோம். 

இப்பொழுதும்கூட நாங்கள் அனைவரும் ஒன்று கூடி ஆண்டுக்கு ஒருமுறை நட்புறவுத் திருவிழா அமைப்பின் கீழ் குடும்பத்தோடு கூடி மேட்டூர் பூங்காவில் அளவளாவி மகிழ்ச்சியடைவோம். நட்பு பாராட்டி மகிழ்வோம். இதில் ஒவ்வொரு ஆண்டும் யாதேனும் ஒரு முறை சார்ந்த பெரியாரை அழைத்து மரியாதை செய்து மகிழ்ச்சியடைவோம். ஒருமுறை பத்திரிக்கையாளர் 'லேனா தமிழ்வாணன்' வருகை புரிந்து எங்களை மனம் திறந்து பாராட்டிச் சென்றார். அப்போது நாங்கள் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்டோம். 'நீங்கள் எப்போதும் இளமையாக இருப்பதின் ரகசியம் என்னவென்று' அவர் சொன்னார் 'நான் வஞ்சத்தை நெஞ்சில் வைப்பதில்லை' என்றார்.

மேலும் கடந்த 'தை' திங்கள் முதல்நாளில் 'தமிழும் தமிழ் அறிஞர்களும்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூலை வெளியிட்டு மகிழ்ந்தோம். அதில் தமிழ் அறிஞர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் அவர்களின் நினைவு கூர்ந்து பாராட்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இது எனக்கு மிகவும் மன நிறைவைத்தந்தது.

இதனை தொடர்ந்து மேட்டூர் தமிழ்ச்சங்கம் மால்கோ தமிழ் இலக்கிய மன்றம், மேட்டூர் அனல் மின்நிலைய இலக்கிய வட்டம், காமராஜர் மன்றம் மேட்டூர் மற்றும் மனவளக்கலை மன்றம் இவற்றோடு தொடர்பு கொண்டு தொடர்ந்து
தமிழ்ப்பணியாற்றி வருகிறோம்.
நன்றி.

அகவை முதிர்ந்த தமிழறிஞருக்கான பரிந்துரைச் சான்று


பெறுதல்

இயக்குநர் அவர்கள், தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை- 600008

ஐயா,

வணக்கம். இந்தப் பரிந்துரைச் சான்றிதழை, அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித்தொகைத் திட்டத்தில் விண்ணப்பிக்கும், பாவலர் திரு. சு.லோகநாதன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.

இவரோடான எனது நட்பு, நாற்பது ஆண்டுகள் பழமையானது. எண்பதுகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும் வகையிலானது. என்பதுகள் என்றாலே, தமிழ்நாட்டில்- திமுக ஆட்சி, ஆளுநர் ஆட்சி, அதிமுக ஆட்சி, ஆளுநர் ஆட்சி என்று அடிக்கடி ஆளுநர் ஆட்சி அடாவடியை முன்னெடுத்த ஒன்றிய ஆட்சியாளர்கள் மீது தமிழ்மக்களுக்கு சினம் உச்சத்தில் இருந்த காலம்.

சரண்சிங், இந்திரா, இராஜிவ் என்று ஒன்றியத்தை ஆண்டவர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீதான ஆளுமைக்கு முயன்று தோல்வி கண்டுகொண்டிருந்த காலம். இதனால், தமிழ்நாட்டில், தமிழ் உணர்ச்சிக்கும், தமிழ்உணர்ச்சியாளர்களின் எழுச்சிக்கும் பஞ்சம் இருக்கவில்லை.

நாங்கள் சந்திந்துக் கொண்டபோது முதல் பரிமாறலே- ஒரே பள்ளியில, அதே தமிழ் ஆசிரியர் தாமோதரனாரின் தமிழ்ப்பாசறையில், எழுச்சி பெற்றவர்கள் இருவரும் என்கிற புரிதலே ஆகும்.

இலக்கிய நண்பர்கள், தமிழியக்கம், மாணவர்விழா, மேட்டூர்த் தமிழ்ச்சங்கத்தோடு தொடர்பு, மேட்டூர் அனல்மின் இலக்கிய வட்டத்தோடு தொடர்பு, இயக்குநர் தமிழியலன் ஐயா வீட்டில் விருந்தோம்பல் மற்றும் தமிழியல் கலந்துரையாடல், தாய்த் தமிழ்த்தொடக்கப் பள்ளி, விசும்பு மாத இதழ், விசும்புதிரை படபிடிப்பு என்று பல்வேறு நண்பர்களுடன் எங்களின் தமிழ்ப்பயணம் ஒரு முப்பது ஆண்டுகள் களைகட்டியிருந்தது.

நான் சென்னை வந்ததும் அந்த வட்டத்து தமிழ்நண்பர்களிடம் தொடர்பு விட்டுப்போய்- உலகளாவிய நட்பு, மௌவல் இயங்கலை இதழ், அமேசான் கிண்டில் நூல் பதிப்புத்தளம், மந்திரம் இணையக் கலைக்கழகம், என்று மாற்று வழியில் என் பயணம்விரிந்த போதும் மாற்றம் இல்லாமல் என்னோடான நட்பைத் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, நான் முயலும் தளங்களிலும் ஆதரவை வழங்கிக் கொண்டிருப்பவர் என்கிற பெருமைக்குரியவர் சு.லோகநாதன். குறும்படம் ஒன்றுக்கு கதை அளித்ததும், தமிழும் தமிழறிஞர்களும் என்றதொரு நூலை வெளியிட்டதும் பாராட்டிற்குரிய இவரின் தனிப்பட்ட முயற்சிகள்.

அவருக்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர் வாய்ப்பையும், உதவித்தொகையையும் வழங்கலாம். அந்த வாய்ப்பைப் பெற நண்பர் சு.லோகநாதன் முழுமையான தகுதியுள்ளவர் என்று சான்றளிக்கிறேன்.

                                                                            இவண்

                                                                            குமரிநாடன்.

                                                        


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்

குமரி நாடன்

அந்த அதிகாரத்திற்கானது மந்திரம்