குமரி நாடன்


குமரி நாடன்

1. கூகுள் தரவு:
குமரி மற்றும் நாடன் என்று இரண்டு தலைப்புகளில் தேடி, ஏறத்தாழ 1,94,000 முடிவுகள் (0.24 நொடிகள்) தருகிறது.

2. வகை: உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில்.
உயர்திணை.

3. மொழி, இருப்பிடம்:
தமிழ்மொழி. சென்னை, தமிழ்நாடு, நாவலந்தேயம்.

4. பிறப்பு: 
17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5057. (01.01.1956)

5. வினைத்திட்பம்:
அ.எழுத்தாளர்:

ஆ.நூல்ஆசிரியர்: 

இ, வலையொளியாளர்:

ஈ. வலைப்பூவாளர்:

உ. சமுகவலைதள இடுகையாளர்:

6. ஈடுபாடு: 
கணியம், மந்திரம், வகைப்பாட்டியல் என்கிற தமிழர் அடிப்படையும், பாகுபாட்டியல், முரண்பாட்டியல் என்கிற உலகினர் அடிப்படையுமான ஐந்தியல் ஆய்வறிஞர் 

7. வணிகம் நாவலந்தேய வருமானத்திற்கான வணிகம்.

8. அமெரிக்க டாலர் வருமானத்திற்கான வணிகம்.

9. வரலாறு:
முன்றாம் வகுப்பில் இருந்தே அன்றாடம் பக்கத்து தேநீர் கடையில், தினத்தந்தி படக்கதை, ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார் போன்ற பகுதிகளைப் படித்துச் சென்று உடன் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டது இன்றும் நிழலாடும் நினைவுகள் ஆகும். 

நான்காம் வகுப்பில்- ஒவ்வொரு புதன் கிழமை மாலையும் பள்ளியில் இருந்து வரும்போதே என் அண்ணாருக்கு இராணி கிழமையிதழ் வாங்கி வருவதும் என் அண்ணார் படித்தவுடன் குடும்பத்தாரோடு சேர்ந்து அன்புள்ள அல்லி கேள்வி பதில்கள், குரும்பூர் குப்புசாமியின் தொடர்கதை, நடுப்பக்க சிறுவர்மலர் படித்ததில் பிணைந்திருந்தது என்வாழ்க்கை தமிழோடு.

தொடக்க கல்வி காலத்தில் பெரும்பாலான ஞாயிறுகளில் ஈரோடு சிதம்பரனார் பூங்காவில் அமைந்த அரசு பொதுதுறை நூலகம் நான் கொண்டாடியிருந்த அறிவூட்டுத் தளமாகும்.

உயர்நிலைப்பள்ளி மற்றும் பள்ளிப் படிப்பு முடித்த காலங்களில் மேட்டூர்அணை கருமலைக்கூடலில் அமைந்த அரசு பொதுதுறை நூலகம் நான் கொண்டாடியிருந்த அறிவூட்டுத் தளமாகும்.

நான் மேட்டூர் வைத்தீசுவரர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது எனது தமிழாசிரியர் தாமேதரன் ஐயா அவர்களின் தமிழ்ப்பாடம் நடத்தும் முறையால் கவரப்பட்டும், எனக்குத் தாய்மொழியாக அமைந்த தமிழின் அருமை பெருமைகளை அந்த அகவைக்கு ஏற்ப உணர்த்தப்பட்டும், தமிழ்மொழி, மற்றும் தமிழ்இலக்கியத்தின் மீதான ஆர்வலனாக மேம்படுத்தப்பட்டேன்.

என்னோடு உடன்பாடுள்ள வகுப்புத் தோழர்களிடம், தமிழ், கவிதை, கதை, நாடகம், பட்டிமன்றம், இப்படியானவைகளே பேசுபொருளாக இருக்கும். நாங்கள் நண்பர்களாக கூடி கவிதை எழுதக் கற்றுக் கொள்வோம். என் அக்காலப் புனைப்பெயர் பைந்தமிழ்ப்பித்தன். தமிழ்ப் பெயர் அமையாத நண்பர்களுக்குப் புனைப்பெயர்களை ஓவியத்தமிழன், இளந்தமிழ்வேள், தமிழ்த்தென்றல், இசைவிரும்பி என்றெல்லாம் அழகு தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம். 

பள்ளி இறுதி வகுப்பிற்குப் பிறகு உள்ளூர் மாரியம்மன் திருவிழாவுக்கு வெளியூரில் இருந்து பற்பல தமிழ்அறிஞர்களை அழைத்து வந்து பட்டிமன்றம், கவியரங்கம் எல்லாம் நடத்தும் தமிழ் இலக்கிய நண்பர்களாக எனது தமிழார்வப்பணி தொடர்ந்தது.

எங்கள் அமைப்பை- பாரதிதாசன் அவர்களின் ஊக்கத்தை முன்னெடுக்கும் நோக்கில், தமிழ்இயக்கம் என்று பெயர் மாற்றி அரசில் பதிவுபெற்று, ஆண்டு தோறும் மேட்டூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து உயர் நிலைப்பள்ளி மாணவர்களையும் அழைத்து, தமிழ் வளர்ச்சி நோக்கில் பற்பல போட்டிகள் நடத்தி மாணவர் விழாக்களை முன்னெடுத்து வந்தோம். 

போட்டியில் வென்றவர்களுக்கு பேரறிஞர் அண்ணா, கலைஞர், பெரியார் போன்ற சமூகநிதித் தலைவர்கள், பாரதிதாசன், பாவாணர், பெருஞ்சித்திரனார், மறைமலை அடிகள் போன்ற தமிழறிஞர்கள் நூல்களைப் பரிசளித்து மாணவர் விழாக்களில் புதிய நடைமுறைகளை முன்னெடுத்து வந்தோம்.
எனது சொந்த வாழ்க்கையில், பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டுதல், அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் பயில வைத்தல் என்ற நிலைப்பாடுகள்- என் தமிழ்ப்பணி முன்னெடுப்பில் முதன்மையானவைகள் என்று பெருமிதம் கொள்ளத் தக்கவைகள் ஆகும். 

ஆங்கில வழிக் கல்வி மோகத்திற்கு எதிராக நான் மேட்டூர் புதுச்சாம்பள்ளியில், தமிழியல் கல்வித்தளம் என்ற பெயரில், ஒரு தாய்தமிழ் பள்ளி தொடங்க, சென்னை அம்பத்தூரில் தாய்த்தமிழ் பள்ளி தொடங்கிய தியாகு எனக்கு முன்னோடியாக அமைந்தார். 

நான் இரண்டாவது தாய்தமிழ்ப் பள்ளி தொடங்கிய முனைப்பால் தமிழ்நாடு முழுவதும் மேட்டூர் காவேரிநகர், வெள்ளியக்காடு, சின்னதானங்குப்பம், காரைக்கால், செக்கடிக் குப்பம், கோபிசெட்டி பாளையம், பல்லடம், உடுமலைப்போட்டை, பொள்ளாச்சி, ஊஞ்ச வேலம்பட்டி, என்று சென்னை அம்பத்தூர் எங்கள் புதுச்சாம்பள்ளி பள்ளி உட்பட அந்தந்த பகுதி தமிழ் ஆர்வலர்களால் ஆங்கில வழிக் கல்வி மோகத்திற்கு எதிராக பனிரெண்டு பள்ளிகளுக்கு மேல் தொடங்கப்பட்டன. 

இந்த பெரு முனைப்புகளைப் பாராட்டும் வகையாக தினமணி நாளேடு, பொங்கல் மலரில், தாய்த்தமிழ் பள்ளிகளுக்கான சிறப்புக் கட்டுரை வெளியிட்டு, அந்தக் காலக்கட்டத்தில் மிகப்பெரிதாக முன்னெடுக்கப்பட்டிருந்த திருப்பூர் பள்ளியைப் பாராட்டி கட்டுரை எழுதியிருந்தது. அது வரை தோன்றியிருந்த இரண்டாவது தாய்தமிழ் பள்ளியான எங்கள் புதுச்சாம்பள்ளி உட்பட, தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த பனிரெண்டு பள்ளிகளையும் குறிப்பிட்டு சிறப்பு செய்தது. 

என்னோடு நெருக்கமாக இருந்த தமிழ் ஆர்வலர்கள் பலரும், தங்கள் கருத்துக்கள், கவிதைகள், படைப்புகளை நூலக வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நிலையில், அவர்கள் ஆர்வத்திற்குக் களமாக விரும்பி 'விசும்பு' என்ற ஒரு சிற்றிதழைத் தொடங்கினேன். விசும்பு இதழுக்கு அரசு பதிவு பெற்று விசும்பு இதழை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினேன். விசும்பின் 1500 படிகளை அஞ்சலில் அனுப்ப சலுகை கட்டண அனுமதியும் அஞ்சல் துறையில் பெற்றிருந்தேன். இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பயணித்து, விசும்பு இதழ் மூலம் பலநூறு படைப்பாளிகளை உருவாக்கினேன்.

விசும்பு இதழில் ஒவ்வொரு மாதமும் நான் எழுதிவந்த பொறுப்பாசிரியர் மடலும் அட்டைப்பட கவிதையும் எனக்கு நிறைய வரவேற்பை பெற்றுத் தந்தது. விசும்பு இதழின் சிறப்பு அதன் உறவுமடல்கள் ஆகும். ஒவ்வொரு உறவு மடலிலும் எனது படைப்புகளுக்கு கிடைத்திருந்த அங்கீகாரம் விசும்பை ஊக்கமுடன் தொடர்வதற்கு நல்ல உரமாக அமைந்திருந்தது. 

விசும்பு இதழின் மூலம், விசும்புதிரை என்கிற காணொளி இலக்கியத் தளத்தை உருவாக்கி, உள்ளூர் தொலைக்காட்சியான ஜி.வி.சேணலுடன் ஒருங்கிணைந்து நான் ஒருங்கிணைத்த பட்டிமன்றமும், படப்பிடிப்பும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்த முன்னெடுப்பு சேலம் மாவட்டத்து திரைத்துறை ஆர்வலர்கள் பலரையும் கவர்ந்து எங்களை பாராட்ட வைத்தது. 
விசும்பு இதழில் சேலம் பொன்குமார் அவர்கள், மாதமொரு சிற்றிதழ் என்ற தலைப்பில் தமிழ்நாட்டுச் சிற்றிதழ்கள் குறித்து தொடர்ந்து எழுதி வந்தார். அந்த அடிப்படையில் தமிழகத்தில் பல சிற்றிதழ்களோடு விசும்பு இதழுக்கும், விசும்பு படைப்பாளிகளுக்கும் தொடர்பு கிடைத்தது. 

சென்னையைச் சேர்ந்த கலை என்கிற சிற்றிதழ் ஆண்டுதோறும் நடத்தி வந்த கதை, கவிதை கட்டுரை போட்டிகளில் ஒன்றான கட்டுரை போட்டிக்கு விசும்பில் நான் எழுதியிருந்த கட்டுரை ஒன்றுக்கு தமிழ்நாடு அளவிலான இரண்டாம் பரிசாக விருதும் பணமுடிப்பும் கிடைத்தன.
அடுத்த ஆண்டு விசும்பு படைப்பாளியான குரா அவர்களுக்கு கலை சிற்றிதழின் கவிதை போட்டியில் முதல் பரிசு கிடைக்கப்பெற்ற நிலையில் விசும்பு இதழின் பொறுப்பாசிரியர் என்ற முறையில் நானும் கௌரவிக்கப் பட்டேன். 

விண் தொலைக்காட்சியில் கவிஞர் அப்துல் ரகுமான் நடத்தி வந்த கவிராத்திரி நிகழ்ச்சியில் கவிதைபாடி அவர் கையால் நினைவுப் பரிசு பெற்றதும் எனது தமிழ் இலக்கிய முனைப்புகளில் ஒன்றாகும்.

தமிழன் எக்ஸ்பிரஸ் இதழ் அறிவித்த, படத்திற்கு கவிதைகள் என்கிற போட்டியில் கலந்து கொண்டு அழகிய கைக்கடிகாரம் பரிசாகக் கிடைக்கப் பெற்றேன், தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் எனது கவிதை வெளியிடப்பட்டது. அந்தக் கவிதையில் நான் முன்னெடுத்திருந்த செய்தி: ஆங்கில வழிக் கல்வியின் மீது தமிழ்ப் பாமர மக்களின் மயக்கம் குறித்ததானது.
நான் சேலம் மாவட்டம் தழுவி பல்வேறு இலக்கிய அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்தேன். மேட்டூர் தமிழ்ச்சங்கம், மேட்டூர் அனல்மின் இலக்கிய வட்டம், ஆகியவைகளில் உறுப்பினராக இயங்கினேன். சேலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்டுடே இதழின் மேட்டூர் செய்தியாளராக செய்திகள் வழங்கி வந்தேன்.

மௌவல் இயங்கலை இதழ், உலகளாவிய தமிழ்மக்களுக்கு எடுத்துச்செல்லும் தமிழ்பணியில் என்னை ஆசிரியராக இணைத்துக் கொண்டுள்ளது.
நான், மௌவல் ஆசிரியர் பக்கத்தில், கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் தமிழர் மேம்பாட்டுக்காக தொடர்ந்து நானூறுக்கு மேலான கட்டுரைகளை எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதியும் வருகின்றேன். 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு, சினிமா என்கிற பிரிவுகளில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதியும் வருகின்றேன். அந்தக் கட்டுரைகளை முகநூல், கீச்சு, கூ, தமிழ்க்கோரா போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து தமிழ் மக்களிடம் தமிழ் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றேன். 

மௌவல் இணையத்தளம், பத்துக்கு மேற்பட்ட தளப்பிரிவுகளில் (டொமைன்) பதினாறு இலட்சத்து ஐம்பத்து நான்காயிரத்திற்கும் மேலான பார்வைகளைக் கொண்டுள்ளது. என்பது பெருமிதம் கொள்ளத்தக்க ஆதரவுத்தரவு ஆகும்.
அமேசான் கிண்டில் நூல் பதிப்புத் தளத்தில், பதினெட்டு மின்நூல்கள் வெளியிட்டுள்ளேன். தொடர்ந்தும் நூல்கள் வெளியிட கட்டுரைகள் எழுதிக் கொண்டுள்ளேன். அவற்றுள் பழந்தமிழர் முன்னெடுத்திருந்த கணியம் குறித்தும், பழந்தமிழர் முன்னெடுத்திருந்த மந்திரம் குறித்தும் நான் மேற்கொண்ட ஆய்வுத்தொடர்ச்சியாக எழுதப்பட்ட- நூல்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன.

நாளது 10.05.2022ல் 'மந்திரம் இணையக் கலைக்கழகம்' என்றொரு இயங்கலைக் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி, அரசு பதிவுபெற்று- அடிப்படைத் தமிழ், இதழியல், கவிஞராக, கணியம், மந்திரம் ஆகிய தலைப்புகளில் சிறப்புச் சான்றிதழ் பயிற்சி அளிக்கும் முயற்சியிலும், உலகளாவிய தமிழ்மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இனிய தமிழ்ப் பெயர் சூட்ட ஆலோசனைகள் அளிக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். 

நான் செயல்படும், தமிழ்க்கோரா என்னும், வினாவிடை வலைதளத்தில்- இதுவரை 2300க்கு மேற்பட்ட வினாக்களுக்கு- தமிழியல் அடிப்படையில் விடையளித்து தமிழ்மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி வருகிறேன். அந்த விடைகள் ஒன்பது இலட்சத்து இருபத்திஆறாயிரத்திற்கு மேலான பார்வைகளைப் பெற்றுள்ளன என்பது பெருமிதம் கொள்ளத்தக்க ஆதரவுத்தரவு ஆகும்.

கொஞ்சம் தமிழ் நிறைய வாழ்க்கை என்றவொரு வலைதளத்தைத் தொடங்கி அதில் தமிழ் மேலாண்மை, கணிய அடிப்படையில் நிறுவனங்களுக்கு பெயர்கள், உட்பட தமிழர் பொருளாதார முன்னேற்றத்திற்கான செய்திகளையும் வெளியிட்டு வருகிறேன். 

பழந்தமிழர் முன்னெடுத்திருந்த கணியம் குறித்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகவும்- பழந்தமிழர் முன்னெடுத்திருந்த மந்திரம் குறித்து பத்தாண்டுகளுக்கு மேலாகவும்- தமிழ்ச்சொற்களில் பொதிக்கப்பட்டுள்ள பொருளிலிருந்தும், பதினென் மேல்கணக்கு, தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்தும், தமிழ்மக்கள் நடைமுறைகளில் இருந்தும் சான்றுகள் தேடி ஆய்வு நடத்தி வருகிறேன். என் பதிவுகள் அனைத்திலும் அந்தத் தரவுகளைப் பகிர்ந்து பேரளவான தமிழ்மக்களிடம் ஆதரவும் பெற்று வருகிறேன்.

தமிழியல் குறித்த இருபது கட்டுரைகளை 'குமரிநாடன் கட்டுரைகள்' என்ற தலைப்பில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அச்சு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளேன்.

1. கே.ஆர்.ஜி. நாகப்பன் என். இராஜம்மாள் அறக்கட்டளை குகை சேலம் எனது இதழியல் பணிக்கு வழங்கிய விருதின் படம்.


2. கலை
சிற்றிதழ், சிறந்த கட்டுரைக்கான இரண்டாம் பரிசுக்கு எனக்கு அளித்திருந்த விருது குறித்தது.


3. கலை சிற்றிதழ் முதல்பரிசு பெற்ற சிறந்த கவிதை இடம் பெற்ற இதழாக விசும்புக்கு அளித்த விருது ஆகும்.



4. கவிக்கோ அப்துல் ரகுமானிடம் பெற்ற கவிராத்திரி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவிதை வாசித்து பெற்ற விருது ஆகும்.



5. நான் நிறுவனராக தொடங்கிய தமிழியல் கல்வித்தளத்தின் ஒருங்கிணைப்புக் குழுவும், நெறியாளர் குழுவும் இணைந்து வழங்கிய செயல்பாட்டுக்கான விருது.



6. மேட்டூர் தமிழ்ச்சங்கத்தின் இருபத்தி ஆறாம்ஆண்டு விழாவில் கருத்தரங்கத்தில் உரையாற்றிய வகைக்கு வழங்கப்பட்ட விருதாகும்.



7. பன்னாட்டு தமிழுறவு மன்றம் நடத்திய விழாவில் செயல்பட்ட வகைக்கு வழங்கிய விருதாகும்



8. மால்கோ தமிழ் இலக்கிய மன்றம் முன்னெடுத்த அண்ணல் காந்தி பிறந்தநாள் விழாவில் செயல்பட்ட வகைக்கு வழங்கிய விருதாகும்



9. மேட்டூர் அணை அனல்மின் இலக்கிய வட்டம் நடத்திய ஒன்பதாம் ஆண்டு தொடக்கவிழாவில் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றியமைக்கு வழங்கப்பட்ட விருதாகும்.



10. மேட்டூர் காமராசர் மன்றம் முன்னெடுத்த காமராசர் விழாவில் இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துக் கொடுத்த வகைக்கு வழங்கப்பட்ட விருதாகும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்

அந்த அதிகாரத்திற்கானது மந்திரம்